பொள்ளாச்சியில் அப்பாவி பெண் களின் மீது அதிகார வர்க்கம் நடத்திய கொடூர பாலியல் தாக்குதல்களைத் தமிழகம் இன்னும் மறந்திருக்காது. "அண்ணா அடிக்காதீங்கண்ணா ... ப்ளீஸ்ண்ணா... வலிக்குது அண்ணா... நானே கழட்டிடுறேன் அண்ணா'’ என்ற அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாய் நக்கீரன் ஒலித்தபோது... ஒட்டுமொத்த தமிழகமும் கோபம் எனும் உணர்ச்சி பிழம்பாய் கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் இந்த கொடூரத்தை மையப்படுத்தி சூர்யா துணிச்சலுடன் நடித்துள்ள படம்தான் "எதற்கும் துணிந்தவன்'.

சூரரைப் போற்று, ஜெய்பீம், நவரசா என வரிசையான ஓ.டி.டி. வெளியீடுகளுக்குப் பிறகு தியேட்டர் பக்கம் வந்திருக்கும் சூர்யா; நவீன காலத்துக் கிராமத்துக் கதைகளை கலர்ஃபுல்லாக தரும் இயக்குநர் பாண்டிராஜ்; சன்பிக்சர்ஸ் தயாரிப்பு என மூன்று துருவங்களின் கூட்டணியாக பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் இப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தியாக்கியதா என்றால் பெரிய ஆச்சரியக்குறி வைத்து அருகே சிறிய கேள்விக்குறியையும் வைக்கலாம்.

surya

Advertisment

தென்னாடு, வடநாடு என இரண்டு ஊர்கள் இக்கதையில் காட்டப்படுகின்றன. இதில் தென்னாட்டில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார் வழக்கறிஞர் கண்ணபிரானாக வரும் சூர்யா. வடநாட்டில் உள்ள ஓர் அரசியல்வாதியின் மகனான இன்பாவாக வரும் வினய், இளம்பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து ப்ளாக்மெயில் செய்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். இப்படி பெண்களுக்கு எதிராக வினய் செய்யும் கொடூரங்களை வக்கீல் கண்ணபிரான் எவ்வாறு தடுத்தார் என்பதே படத்தின் கதை.

பணமும் அதிகாரமும் படைத்தவர்களால் அப்பாவி பெண்களுக்கு நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நீதி தராசைக் கையிலெடுக்கும் வக்கீல் கண்ணபிரானான சூர்யா, "ஜெய் பீம்' சந்துருவின் தாக்கம் சிறிதும் இன்றி கச்சித மாகக் கதாபாத்தி ரத்தில் பொருந்திப் போகிறார். "டாக்டர்' படத்தில் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா, இப்படத்திலும் தொடக்கத்தில் அப்படித் தெரிந்தாலும் பிற்பாதியில் பல காட்சிகளில் சிறப்பாக நடித்து ரசிக்க வைத்துள்ளார். இவர்களைத் தவிர படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, திவ்யா துரைசாமி மற்றும் காமெடி பட்டாளங்கள் அவரவர் பாத்திரப்பணியை சிறப்புறச் செய்திருக்கிறார்கள். வினய் நடிப்பு சில இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது.

இமானின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது. பாடல்களை பொறுத்தவரை "உள்ளம் உருகுதய்யா' பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. இப்படத்தின் முக்கியமான கமர்ஷியல் எலெமெண்ட் என்றால் அது சண்டைக்காட்சிகள்தான். ராம் லட்சுமணன், அன்பறிவ் என நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியாற்றியுள்ளனர். இவர்களது வழக்கமான பாணியில் ஸ்டண்ட் மேன்கள் நாலா பக்கமும் பறக்கவிடப் பட்டிருக்கிறார்கள். ரத்னவேலுவின் கேமரா கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப பல இடங்களில் புகுந்து விளையாடி யுள்ளது. ரூபனின் எடிட்டிங் சில இடங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு அதிகார வர்க்கத்திலிருக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் நடந்த பாலியல் கொடுமைகள், அதன் பின்னணியில் நடந்த கொலைகள், வீடியோ மிரட்டல்கள் போன்றவற்றால் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளைக் கதைக்களமாகக் கையில் எடுத்து அதனை கமர்ஷிய லாகக் கொடுக்க முயன்றிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் பாராட்டுக்குரியவர்.

அவரது படங்களுக்கே உரித்தான கிராம பின்னணி, பழக்கவழக்கம், கலாச்சார விவரத்திற்கும் இப்படத்திலும் பஞ்சமில்லை. அதேபோல காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்கிற கமர்ஷியல் தன்மைகளுக்கான மெனக் கெடலிலும் எந்த குறையுமில்லை. ஆனால், திரைக்கதையில் அவை பொருத்தப்பட்ட இடங்கள் சற்றே அயர்ச்சியை ஏற்படுத்து கிறது. காவலன் நஞந அப்ளிகேசன் குறித்த விழிப்புணர்வு, "பெண் குழந்தைகளை எப்படிப் பார்க்க வேண்டுமெனச் சொல்லித்தான் என் புள்ளைய வளர்த்திருக் கிறேன்'' போன்ற அம்மா சரண்யாவின் வசனங்கள், தன் உடலை தனக்கே தெரியாமல் வீடியோ எடுத்தால் அது தன் தவறல்ல; எடுத்தவனின் தவறு என்பன போன்ற வசனங்கள் வழியே சமூக பாடமெடுப்புகள் அருமை.

ஆனாலும், அடுத்த நிமிடம் ஏதோ ஒரு வகையில் நெருக்கடி வரப்போகிறது என்று தெரிந்தும் சாவகாசமாக இருக்கிற நாயகனின் அலட்டல் இல்லாத தன்மை உட்பட ஆங்காங்கே சில லாஜிக் ஓட்டைகள். பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திய கூட்டத்தினர் தண்டிக்கப்படுகிற கிளை மேக்ஸ் நம்ப மறுக்கிற விஷயமாய் இருக்கிறது. கமர்ஷியல் சினிமாவிற்குள் யதார்த்தமான சில விஷயங் களையும் சமூகப் பொறுப்புடன் கொண்டுவர மெனக்கெடல் நடந்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது;

எதற்கும் துணிந்தவன் ஒரு வகையில் பாடம் தான்; கவனிக்கலாம், கவனத்தில் கொள்ளலாம்!